டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு முன்னதாக, யூடியூபர் துருவ் ரதி, காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) சட்டப்பிரிவுத் தலைவர் ரத்னா சிங் மற்றும் கொள்கை பிரிவுத் தலைவர் மெஹர் பாஸ்ரிச்சா ஆகியோரை டெல்லி காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான புகார்களை முன்வைத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் கியான் குமார் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. சனிக்கிழமை காலை நிலவரப்படி சுமார் 150 போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தைக் கூறி இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி முழுவதும் 35,000 காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோடு, ஜன்பத்-கர்த்தவ்யா பாதை சந்திப்பைச் சுற்றியுள்ள நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் 24 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், 30 இடங்களில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
பல மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன. புது தில்லி மற்றும் ஹசரத் நிஜாமுதீன் நிலையங்களுக்குச் செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், தடைகளையும் அனுமதி மறுப்பையும் மீறி போராட்டத்தை நடத்தப்போவதாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.




