பெங்களூரு சுதந்திர பூங்காவில் 'மக்கள் நீதிமன்றம்' என்ற பெயரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் மற்றும் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆர்) எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி வாக்குத் திருட்டில் ஈடுபட்டு ஜனநாயகத்தை சிதைப்பதாக அபிஜித் தீப்கே குற்றம்சாட்டினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்கள் சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களுடையவை என குறிப்பிட்டார். எஸ்ஐஆர் முறை மூலம் யார் வாக்களிக்க வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் விமர்சித்தார். தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
எஸ்ஐஆர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். தேசத்தையும் ஜனநாயகத்தையும் மீட்டெடுக்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.


