இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் 'ஃப்ரீ-ஸ்பேஸ்' குவாண்டம் கீ டிஸ்ட்ரிபியூஷன் (QKD) தகவல் தொடர்பு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த டீப்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'க்யூஎன்யு லேப்ஸ்' (QNu Labs), பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவிசார் தகவல் நிறுவனம் (BISAG-N) மற்றும் ஐஐடி காந்திநகர் ஆகியவற்றுடன் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டது.
சுமார் 5. 56 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்தத் தகவல் தொடர்பு இணைப்பு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. வழக்கமான ஃபைபர் ஆப்டிக் கேபிள்களுக்குப் பதிலாக, திறந்தவெளி அல்லது விண்வெளி வழியாக ஒளித் துகள்களைப் பயன்படுத்தி ரகசிய டிஜிட்டல் கடவுச்சொற்களைப் பரிமாறிக்கொள்ளும் அதிநவீன தொழில்நுட்பமே இந்த 'ஃப்ரீ-ஸ்பேஸ்' குவாண்டம் தகவல் தொடர்பு முறையாகும்.
குவாண்டம் இயற்பியல் விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையில், தரவுகளை இடைமறிக்கவோ அல்லது திருடவோ முயற்சிக்கும் எவரும் ஒளித் துகள்களின் நிலையை மாற்றிவிடுவார்கள் என்பதால், இது மிகவும் பாதுகாப்பான தகவல் தொடர்பு முறையாகக் கருதப்படுகிறது. ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் அமைக்க முடியாத இடங்களிலும், நீர்நிலைகள் மற்றும் திறந்தவெளிகளிலும் இந்தத் தொழில்நுட்பம் சிறப்பாகச் செயல்படும்.
மேலும், இது பூமிக்கும் செயற்கைக்கோள்களுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கும், உலகளாவிய குவாண்டம் பாதுகாப்பான இணைய வலைப்பின்னலை உருவாக்குவதற்கும் அடித்தளமாக அமையும். கடந்த செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரவு நேரத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
'க்யூஎன்யு லேப்ஸ்' நிறுவனத்தின் 'பாயிண்டிங், அக்விசிஷன் அண்ட் டிராக்கிங்' (PAT) அமைப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், குவாண்டம் பிட் பிழை விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. மேலும், வினாடிக்கு 230 முதல் 260 பிட்கள் (bps) என்ற வேகத்தில் பாதுகாப்பான சாவிகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சாவிகள், பிஐஎஸ்ஏஜி-என் நிறுவனத்தின் 'வேதிக் கவசம்' (Vedic Kavach) தளத்துடன் இணைக்கப்பட்டு, சோதனைச் செய்திகள் வெற்றிகரமாக என்க்ரிப்ட் மற்றும் டீக்ரிப்ட் செய்யப்பட்டன.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிஐஎஸ்ஏஜி-என் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் வினய் தாக்கூர், "வேதிக் கவசம் தளத்துடன் க்யூஎன்யு லேப்ஸ் நிறுவனத்தின் குவாண்டம் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தது, குவாண்டம் எதிர்ப்புத் திறன் கொண்ட தகவல் தொடர்பு அமைப்புகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்" என்று கூறினார். க்யூஎன்யு லேப்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுனில் குப்தா கூறுகையில், "இந்த 5.
56 கி. மீ தொலைவிலான சோதனை வெற்றி, நீண்ட தூர குவாண்டம் பாதுகாப்பான வலைப்பின்னல்கள் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான குவாண்டம் தகவல் தொடர்புக்கு வழிவகுத்துள்ளது" என்று தெரிவித்தார். ஐஐடி காந்திநகரின் ஐஎஸ்டிஎஃப் பொறுப்பாளர் கொமடோர் மணீஷ் திரிபாதி (ஓய்வு) கூறுகையில், "இந்தச் சோதனை, நடைமுறை குவாண்டம் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த களச் சூழலை வழங்குகிறது.
கல்வித்துறை, உள்நாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் நிஜ உலகச் சோதனைகள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்" என்று குறிப்பிட்டார். இந்தச் சோதனை, இந்தியாவின் பாதுகாப்பான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, எதிர்கால குவாண்டம் காலத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



