தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் எதிர்க்கட்சிகள் சார்பில் மூன்றாவது நாளாகத் தொடர் போராட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிக எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் திரண்ட நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாதுகாப்பு கருதி ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஜன்பத் சாலை, சன்சாத் மார்க் பகுதிகளில் அதிவிரைவுப் படை உட்பட 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதி முழுவதும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இளைஞர் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பேரணி நடத்த அனுமதி கோரிய நிலையில், அதற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையத்தை அக்டோபர் 6-ம் தேதி முற்றுகையிட இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்டோபர் 10-ம் தேதி முதல் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. போராட்டத்திற்கு அனுமதி கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




