தலைமை தேர்தல் ஆணையர் கியான்ேஷ் குமார் பதவி விலகக் கோரி, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) மும்பை மற்றும் டெல்லியில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சிஜேபி இந்த போராட்டத்தை அறிவித்திருந்தது. மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்த சிஜேபி திட்டமிட்டிருந்தது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த போதிலும், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிவாஜி பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது. போராட்டத்தால் தங்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அமைதி பாதிக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி குடியிருப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா இது குறித்து கூறுகையில், "13 கோடி மக்களின் வாக்குகளை மீட்டெடுக்க சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தால், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கியான்ேஷ் குமார் இந்த நாட்டின் மிகப்பெரிய துரோகி. வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதற்கு அவரே பொறுப்பு," என்று தெரிவித்தார்.
சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், கியான்ேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கிடையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், "தேர்தல் ஆணையத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. மூன்று தேர்தல் ஆணையர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, இந்த போலி பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இத்தகைய தவறான பிரச்சாரங்களை முன்னெடுக்க முயற்சிகள் நடக்கின்றன," என்று கூறினார். டெல்லியில், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சௌரப் பரத்வாஜ் மற்றும் சஞ்சீவ் ஜா ஆகியோரை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தையொட்டி, மத்திய டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அப்பகுதியில் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163 அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், லாத்தூரில் சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். நீட் தேர்வு விவகாரத்தில் அவர் உரிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டிய மாணவர்கள், அரசு அளித்த வாக்குறுதிகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.



