துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற பிளைதுபாய் (flydubai) விமானத்தில், சக விமானி கத்தியால் குத்திய நிலையிலும், பயணிகளின் உயிரைக் காக்கப் போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சார், பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, காணொளி வாயிலாக ஸ்மித் மச்சாருடன் உரையாடினார். புதன்கிழமை காலை நடந்த இந்தத் துயரச் சம்பவத்தின்போது, ஓமன் நாட்டைச் சேர்ந்த சக விமானி, ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தினார்.
இதனால் விமானம் 30 வினாடிகளுக்குள் சுமார் 14,000 அடி உயரத்தில் இருந்து கீழே சரிந்தது. விமானத்தில் 170-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். காயம் அடைந்த நிலையிலும், ஸ்மித் மச்சார் மிகுந்த மன உறுதியுடன் செயல்பட்டதால், விமானத்தில் இருந்த மற்ற பணியாளர்கள் மற்றும் பயணிகள் காக்பிட் அறைக்குள் நுழைந்து அந்த சக விமானியை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், விமானத்தில் இருந்த மற்றொரு விமானிகள் குழு, சவூதி அரேபியாவின் தபூக் நகரில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கியது. பிரதமர் மோடியுடனான 10 நிமிட உரையாடலின்போது, ஸ்மித் மச்சாரின் துணிச்சலையும், சமயோசித புத்தியையும் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். 'நீங்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தீர்கள்.
அப்படியிருந்தும், உங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், பயணிகளின் உயிரைக் காக்க நினைத்தீர்கள். உங்கள் செயலைக் கண்டு 140 கோடி இந்தியர்களும் பெருமை கொள்கிறார்கள்' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்தைச் சேர்ந்த ஸ்மித் மச்சார், தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, 'நான் பலத்த காயங்களுடன் சரிந்து விழுந்தேன்.
ஆனால், நான் எதுவும் செய்யாவிட்டால் அனைவரும் உயிரிழந்துவிடுவோம் என்பதை உணர்ந்தேன். 17 ஆண்டுகளாக விமானம் இயக்கி வருகிறேன், கடந்த 11 ஆண்டுகளாக கேப்டனாகப் பணியாற்றி வருகிறேன். விமானம் கீழே விழுவதை என்னால் உணர முடிந்தது.
அதுவே எனது கடைசி முயற்சி என்று கருதி, காக்பிட் கதவைத் திறந்தேன். அதன் பிறகுதான் பயணிகள் மற்றும் பணியாளர்கள் எனக்கு உதவ வந்தனர்' என்று கூறினார். மேலும், 'நான் காயமடைந்திருந்தாலும், பயணிகளைச் சாக விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
தான் பயப்படும் நேரங்களில் அனுமன் சாலீசாவை பாராயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அந்த இக்கட்டான சூழலிலும் அதையே செய்ததாகவும் அவர் தெரிவித்தார். 'வலியை உணர்ந்தபோதெல்லாம் அனுமன் சாலீசாவை உச்சரித்தேன். கடவுள் என்னை காப்பாற்றினார்' என்று அவர் கூறினார்.
மும்பையிலிருந்து சமீபத்தில் துபாய்க்கு குடிபெயர்ந்த ஸ்மித் மச்சார், தனது இரண்டு வயது மகனுக்கும் தினமும் அனுமன் சாலீசாவைக் கற்றுக்கொடுப்பதாகக் குறிப்பிட்டார். ஸ்மித் மச்சாரின் இந்தச் செயலைப் பாராட்டிய பிரதமர் மோடி, 'நீங்கள் ஒரு மாபெரும் காரியத்தைச் செய்துள்ளீர்கள். நீங்கள் மட்டும் விமானத்தைக் காப்பாற்றத் தவறியிருந்தால், இந்திய விமானிகள் மீதான பார்வை எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை.
நீங்கள் அனைவரையும் காப்பாற்றிவிட்டீர்கள், மிகச் சிறந்த பணியைச் செய்துள்ளீர்கள்' என்று தெரிவித்தார்.




