தலைமை தேர்தல் ஆணையர் கியான்ேஷ் குமார் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 700 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் அதிஷி, சஞ்சய் சிங், சௌரப் பரத்வாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் மற்றும் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தல் முறைகேடு புகார்களை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் தடுப்புகள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரக்கம்பா சாலை உள்ளிட்ட 11 டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு டெல்லி போக்குவரத்து போலீசார் பயணிகளுக்கு அறிவுறுத்தினர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையை ஆர்.ஜே.டி எம்.பி மனோஜ் ஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்தனர். இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டக் களத்திற்கு வர முயற்சிப்பார் என ஆம் ஆத்மி தலைவர்கள் தெரிவித்த நிலையில், அவரது இல்லத்தைச் சுற்றியும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.




