இந்தியா உட்பட 20 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சிறப்பு வகை மருந்துகள் மற்றும் அதன் மூலப்பொருட்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் 232-வது பிரிவின் கீழ் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரிதான நோய்களுக்கான சிகிச்சை, கருத்தரிப்பு மருந்துகள், செல் மற்றும் மரபணு சிகிச்சை மருந்துகள் மற்றும் கால்நடை மருத்துவப் பொருட்கள் இந்த வரி விலக்கின் கீழ் வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட அமெரிக்காவின் வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரர் நாடுகளுக்கும் இந்த சலுகை பொருந்தும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவான மருத்துவப் பொருட்கள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்கள் ஏற்கனவே இந்த வரி விதிப்பிலிருந்து முழுமையாக விலக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


