நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்த விரிவான ஆய்வுக்குப் பிறகு, அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த நீட்டிப்பு அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1958-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ், பாதுகாப்புப் படையினருக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பின்படி, முன்னதாகவே திரும்பப் பெறப்படாத பட்சத்தில், அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும். மணிப்பூரைப் பொறுத்தவரை, மாநிலம் முழுவதும் இந்தச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், பிஷ்ணுபூர் மற்றும் காக் சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 13 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள் இந்த அறிவிப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. நாகாலாந்தில், திமாப்பூர், நியுலாந்து, சுமு கேதிமா, மோன், கிஃபைர், நோக்லாக், ஃபெக், பெரென் மற்றும் மெலூரி ஆகிய ஒன்பது மாவட்டங்கள் 'பாதிப்புக்குள்ளான பகுதிகள்' (disturbed areas) என அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், கோஹிமா, மோகோக்சுங், லாங்லெங், வோகா மற்றும் சுன்ஹெபோடோ ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 21 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்தச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில், திரப், சாங்லாங் மற்றும் லாங்டிங் ஆகிய மாவட்டங்களில் இந்தச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அசாம் மாநில எல்லையை ஒட்டியுள்ள நம்சாய் மாவட்டத்தில் உள்ள நம்சாய், மகாதேவ்பூர் மற்றும் சௌக்கம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்தச் சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1958-ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ், குறிப்பிட்ட பகுதிகளை 'பாதிப்புக்குள்ளான பகுதிகள்' என அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



