பன்னீர் என்ற பெயரில் விற்கப்படும் பால் அல்லாத அனலாக் (Analogue) தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் மத்தியில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கும் நோக்கில், 2011-ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (விற்பனை மீதான தடை மற்றும் கட்டுப்பாடுகள்) ஒழுங்குமுறைகளில் திருத்தம் கொண்டுவர இந்த ஆணையம் முன்மொழிந்துள்ளது.
இதன்படி, பால் அல்லாத மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் இனி 'பன்னீர்' என்ற பெயரையோ அல்லது அது தொடர்பான அடையாளங்களையோ லேபிள்களிலும் விளம்பரங்களிலும் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும். தற்போது 'பால் சார்ந்த அனலாக்' என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட தயாரிப்புகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
இந்த வரைவு ஒழுங்குமுறைகள் குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என FSSAI அறிவித்துள்ளது. இதற்கான கருத்துகளை, அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள், புது தில்லி கோட்லா சாலையில் உள்ள FDA பவனில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரியிடமோ அல்லது regulation@fssai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.
