ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் 60-வது கூட்டத்தொடரில், காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் மீண்டும் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது. 1990-ம் ஆண்டு காஷ்மீரி பண்டிட்டுகள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு பாகிஸ்தான் ஆயுதம் ஏந்தி பயிற்சி அளித்த பயங்கரவாதிகளே காரணம் என்று இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜெனீவாவில் உள்ள இந்திய நிரந்தர தூதரகத்தின் சார்பில் பேசிய அவர், பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு, ஜம்மு-காஷ்மீர் குறித்துப் பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டார். இது குறித்து அவர் பேசுகையில், '1990-ல் காஷ்மீரி பண்டிட்டுகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக பாகிஸ்தானால் ஆயுதம் ஏந்தி, பயிற்சி அளிக்கப்பட்டு, எல்லை தாண்டி அனுப்பப்பட்ட பயங்கரவாதிகளே இந்தச் செயலைச் செய்தனர். அந்தப் பயங்கரவாதிகள் பின்னர் அனைத்து மதத்தைச் சேர்ந்த காஷ்மீரிகளையும், குறிப்பாக முஸ்லிம்களையும் கொன்று குவித்தனர். இத்தகைய பயங்கரவாதத்தை ஆதரித்த ஒரு நாடு, இப்போது இந்த கவுன்சிலிடம் விசாரணை கோருவது மிகுந்த வேடிக்கையானது' என்று சாடினார்.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதை மீண்டும் வலியுறுத்திய இந்தியத் தூதர், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 1989-ல் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் மூலம் காஷ்மீரில் உள்ள இந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். இதன் விளைவாக, பல நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினர் ஆயிரக்கணக்கில் வெளியேறினர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் உயிரிழந்துள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் மோசமான சூழல் குறித்தும் ஷிதிஜ் தியாகி கவலை தெரிவித்தார். ஜூன் மாதம் முதல் அங்கு பொதுமக்கள் கொல்லப்படுவது, இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் மாணவர்கள் கைது செய்யப்படுவது, உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுவது போன்ற சம்பவங்களை அவர் பட்டியலிட்டார்.
சிறுபான்மையினர் விவகாரத்தில் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தையும் அவர் அம்பலப்படுத்தினார். இந்தியாவில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் நாட்டின் உயரிய பதவிகளிலும், உச்ச நீதிமன்றத்திலும், சட்டமியற்றும் அமைப்புகளிலும் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், 1947-க்கு பிறகு பாகிஸ்தானில் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துவிட்டது.
அங்கு சிறுபான்மையினப் பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதும், மத நிந்தனைச் சட்டங்கள் மூலம் அவர்கள் அச்சுறுத்தப்படுவதும், ஷியா, அஹ்மதியா, இஸ்மாயிலி மற்றும் ஹசாரா சமூகத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இத்தகைய மோசமான வரலாற்றைக் கொண்ட பாகிஸ்தான், மற்ற நாடுகளுக்கு அறிவுரை கூறத் தகுதியற்றது என்று அவர் கூறினார்.
பிற நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிப்பதிலும், பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஐ. நா. வில் இத்தகைய நாடகங்களை நடத்துவதால் அந்நாட்டின் பொருளாதாரக் கடன் சுமை குறையப்போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.


