ராகுல் காந்தியின் 'சத்ரோன் கி கூஞ்ச்' பேரணிகளுக்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பதாக காங்கிரஸ் கட்சி கருதி வந்தாலும், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க (DUSU) தேர்தல் முடிவுகள் அக்கட்சியின் உட்கட்சிப் பூசலையும், பலவீனத்தையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்.எஸ். யு. ஐ.
(NSUI) போட்டியிட்ட நான்கு இடங்களிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. சனிக்கிழமை (செப்டம்பர் 19) வெளியான தேர்தல் முடிவுகளின்படி, பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி. பி. (ABVP) தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் ஆகிய மூன்று பதவிகளைக் கைப்பற்றி தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
துணைத் தலைவர் பதவிக்கு, என். எஸ். யு.ஐ. அமைப்பில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்ட தீபான்ஷு ஷோகீன் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தல் தோல்வி, இந்தூரில் ராகுல் காந்தி 'சத்ரோன் கி கூஞ்ச்' பேரணியில் உரையாற்றுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கல்வித்துறையில் நிலவும் சிக்கல்கள் குறித்து பாஜகவை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், இந்தத் தோல்வி அக்கட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இருப்பினும், 2014-க்குப் பிறகு நடந்த தேர்தல்களைப் போல இது ஒருதலைப்பட்சமான வெற்றியாக இல்லாமல், கடும் போட்டி நிறைந்ததாக இருந்ததை காங்கிரஸ் கட்சி ஒரு ஆறுதலாகப் பார்க்கிறது.
சுமார் 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாக்களித்த இந்தத் தேர்தலில், பாஜக மற்றும் ஏ. பி. வி.
பி. க்கு எதிராக மாணவர்களிடையே அதிருப்தி நிலவியது வாக்கு எண்ணிக்கையில் தெளிவாகத் தெரிந்தது. இந்த அதிருப்தியை வாக்குகளாக மாற்ற என்.எஸ். யு. ஐ.
ஏன் தவறியது என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தத் தோல்விக்கு வேட்பாளர் தேர்வில் ஈடுபட்ட தலைவர்களே காரணம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன. இது குறித்து என்.எஸ். யு. ஐ. தேசிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு 13,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தீபான்ஷு ஷோகீன் மற்றும் செயலாளர் பதவிக்கு இரண்டாம் இடம் பிடித்த சமாஜ்வாதி சத்ர சபாவின் விசேஷ் யாதவ் ஆகிய இருவரும் என். எஸ். யு.ஐ. உறுப்பினர்கள் தான். சில தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்கள் கிளர்ச்சியாளர்களாகப் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது' என்று தெரிவித்தார்.



