டாடா குழுமத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிப்பார் என்று டாடா சன்ஸ் வாரியம் அறிவித்துள்ளது. மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற டாடா சன்ஸ் வாரியக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
முன்னதாக, தனது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று சந்திரசேகரன் கடந்த மாதம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் பொறுப்பேற்க ஒப்புக்கொண்டுள்ளார். சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் பிப்ரவரி 20, 2027 அன்று முடிவடைய உள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
சந்திரசேகரன் மீண்டும் பதவியில் நீடிக்க முடிவெடுத்திருப்பது, டாடா குழுமத்தின் தலைமை மாற்றம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பின் தலைவர் நோயல் டாடா, சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு புதிய தலைவரைத் தேடும் பணியைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
மேலும், சர் டொராப்ஜி டாடா டிரஸ்ட் அமைப்பும் புதிய தலைவரைத் தேர்வு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு டாடா டிரஸ்ட்ஸ், சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க ஒருமனதாகப் பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும், பிப்ரவரி மாதம் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில், நான்கு இயக்குநர்கள் இந்த நீட்டிப்புக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், நோயல் டாடா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வாரியத்தில் ஒருமித்த கருத்து இல்லாததால் தனது பதவிக்கால நீட்டிப்புக்கான முன்மொழிவை ஏற்கப்போவதில்லை என்று சந்திரசேகரன் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில், டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிகளின்படி, தலைவர் பதவிக்கான நபரைத் தேர்வு செய்ய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.
இதில் மூன்று உறுப்பினர்களை சர் டொராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் இணைந்து நியமிக்க வேண்டும், மீதமுள்ள இருவரை டாடா சன்ஸ் வாரியம் நியமிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


