ரஷ்யா மீது அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள புதிய பொருளாதாரத் தடைகள் மசோதா குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. 140 கோடி இந்திய மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும், நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகை செய்யும் 'லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சட்டம் 2026' அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா தற்போது அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், '140 கோடி மக்களின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, பல்வேறு நாடுகளிலிருந்து எரிசக்தி ஆதாரங்களைப் பெற்று இந்தத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்வோம்' என்று குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் போரை எதிர்கொள்ளும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதா, ரஷ்யாவின் எரிசக்தித் துறை மற்றும் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு எதிராக 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. ரஷ்யாவின் கடல்வழி கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்தச் சட்டம் இந்தியாவின் வர்த்தக நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இருப்பினும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்கா, பிரேசில், கனடா, வெனிசுலா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தொடங்கி, ஆதாரங்களைப் பன்முகப்படுத்தி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் இந்தியா ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்தச் சட்டத்தினால் இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து இந்தியத் தரப்பு தெளிவாக எடுத்துரைத்துள்ளது. அமெரிக்கா அறிவிக்கவுள்ள வரி விகிதங்கள், எந்தெந்தப் பொருட்கள் இந்த வரி வரம்பிற்குள் வரும் மற்றும் அமல்படுத்தப்படும் கால அட்டவணை ஆகியவை தெரிந்த பிறகே, இந்திய ஏற்றுமதி மீதான உண்மையான பாதிப்பை மதிப்பிட முடியும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்புகளுடன் இணைந்து, இந்தச் சட்டத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் வெளியுறவு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.


