மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஊசி மற்றும் குளுக்கோஸ் ஏற்றும் கருவிகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கு, சந்தை விலையை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது நோயாளிகளுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி வருகிறது. மொத்த விற்பனை சந்தையில் 11 ரூபாய்க்கு விற்கப்படும் ஐவி (IV) இன்பியூஷன் செட், மருத்துவமனைகளில் 325 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல், 7 ரூபாய்க்கும் குறைவாகக் கிடைக்கும் ஊசி (Disposable syringe), சுமார் 60 ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதய வால்வுகள், பேஸ்மேக்கர்கள் மற்றும் கண் லென்ஸ்கள் போன்ற உயர் மதிப்புள்ள மருத்துவ சாதனங்களின் விலை, இறக்குமதி செய்யப்பட்ட விலையை விட 10 முதல் 30 மடங்கு வரை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற அதிகப்படியான விலை நிர்ணயம், நோயாளிகளின் மருத்துவக் கட்டணத்தை பெருமளவு உயர்த்துகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக இந்த விவகாரம் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வந்தாலும், தற்போது மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மீண்டும் இந்த சிக்கலை முன்னிலைப்படுத்தியுள்ளது. மருத்துவ உபகரணங்களின் விலையை நிர்ணயிப்பது யார் - உற்பத்தியாளர்களா, மருத்துவமனைகளா அல்லது ஒழுங்குமுறை ஆணையமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) மேற்கொண்ட முந்தைய ஆய்வுகளில், பல தனியார் மருத்துவமனைகள் மருத்துவ உபகரணங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிவிட்டு, நோயாளிகளிடம் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) வசூலிப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துக்காராம் முண்டே தனது எக்ஸ் (X) தளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளார். அதில், 'மருத்துவ உபகரணங்களின் விலையில் 2,841% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணை, 2013-ன் கீழ் குறிப்பிட்ட மருந்துகள் மட்டுமே விலை வரம்பிற்குள் வருகின்றன.
ஆனால், பெரும்பாலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் நுகர்பொருட்கள் இந்த வரம்பிற்குள் வராததால், அவற்றின் விலை மற்றும் அது தொடர்பான தகவல்கள் கண்காணிக்கப்படுவதில்லை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொள்முதல் விலைக்கும், அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க மத்திய அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இதய ஸ்டெண்டுகள் மற்றும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கான இம்ப்ளான்ட்களின் விலையை NPPA கட்டுப்படுத்தியது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்ஸ் ஆக்சிமீட்டர், ரத்த அழுத்த மானிகள் மற்றும் குளுக்கோமீட்டர்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் வர்த்தக லாப வரம்பை அரசு கட்டுப்படுத்தியது. மருத்துவ உபகரணங்களின் விலை நிர்ணயம் குறித்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
தற்போதைய மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணை, மருத்துவ உபகரணங்களின் விலையைக் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என்று உள்நாட்டு மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (AiMeD) தெரிவித்துள்ளது. ஊசி மற்றும் ஐவி செட் போன்ற பொதுவான உபகரணங்களுக்கு 75 சதவீதமும், பேஸ்மேக்கர் மற்றும் இதய வால்வுகள் போன்ற உயர் மதிப்புள்ள சாதனங்களுக்கு 50 சதவீதமும் வர்த்தக லாப வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று அந்த சங்கம் பரிந்துரைத்துள்ளது.

