திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரத்தில், சுக்ரிதி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்லாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட அவர், விசாகப்பட்டினத்தில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அக்மார்க் உயர் தர பசு நெய் என்ற பெயரில், பாமாயில் மற்றும் பல்வேறு ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலப்பட நெய்யை திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு விநியோகித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2019 முதல் 2024 வரையிலான காலத்தில், ரூ.96 கோடி மதிப்புள்ள நெய்யை ரூ.230 கோடிக்கு விநியோகம் செய்து பண மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி ஸ்பெஷாலிட்டிஸ் உள்ளிட்ட பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் இந்த கலப்பட நெய் விநியோகத்தை கைலாஷ் சந்த் மங்லா ஒருங்கிணைத்துள்ளார். கலப்படத்தை மறைக்க போலியான ஆவணங்களை உருவாக்கியதாகக் கூறப்படும் நிலையில், இதே குற்றச்சாட்டில் போலே பாபா ஆர்கானிக் டெய்ரி நிறுவன உரிமையாளர் விபின் ஜெயின் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

