யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், 100 ரூபாய் பரிவர்த்தனைக்கு 40 பைசா கட்டணம் செலுத்துவதால் யாரும் செத்துவிடமாட்டார்கள் என நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மத்திய அரசால் நீண்ட காலம் இலவசமாக வழங்க முடியாது என அவர் நியாயப்படுத்தியுள்ளார். சர்வர் பராமரிப்பு மற்றும் பரிவர்த்தனை செலவுகளைக் கருத்தில் கொண்டு, இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தன.
மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை. இருப்பினும், ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு மற்றும் எரிபொருள் போன்ற குறிப்பிட்ட வணிகப் பிரிவுகளில் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் அல்லது அதிகபட்சமாக 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



