மத நம்பிக்கைகள் அல்லது மனசாட்சியின் அடிப்படையில் 'வந்தே மாதரம்' பாடலை பாட மறுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
அதேசமயம், வந்தே மாதரம் பாடலில் இரண்டு சரணங்கள் இருக்க வேண்டுமா அல்லது ஆறு சரணங்கள் இருக்க வேண்டுமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்றும், அது நாடாளுமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
கர்நாடக இசைக்கலைஞர் டி. எம். கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.
மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த கருத்துகளைத் தெரிவித்தது. வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தையும் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், கடைசி நான்கு சரணங்கள் இந்து தெய்வங்களை போற்றுவதாகவும், இது சில சமூகத்தினரின் மத நம்பிக்கைகளை புண்படுத்தக்கூடும் என்றும் வாதிடப்பட்டது. தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ், தேசிய பாடலைப் பாடுவதைத் தடுப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், 1986-ஆம் ஆண்டின் பிஜோ இம்மானுவேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டினர். அதன்படி, தேசிய கீதத்தை பாடாவிட்டாலும், அதற்கு உரிய மரியாதை அளிக்கும் பட்சத்தில் எவர் மீதும் தண்டனை விதிக்க முடியாது. இந்த சட்ட நிலை இன்றும் அமலில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், 'யாரது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25 உரிமைகளும் அல்லது மனசாட்சியின் அடிப்படையில் மறுப்பவர்களின் உரிமைகளும் மீறப்படக்கூடாது' என்று தெரிவித்தனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதரன், 1937-ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் செயற்குழு இரண்டு சரணங்களை மட்டுமே பாட முடிவு செய்திருந்ததைச் சுட்டிக்காட்டினார். மேலும், ஆறு சரணங்களையும் பாடுவது கட்டாயமாக்கப்படுவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று அவர் வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்க முடியாது என்றும், இந்த மனு தேவையற்ற பரபரப்பை உருவாக்குவதற்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேசிய பாடல் எது என்பதைத் தீர்மானிப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணி என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறினர்.
இருப்பினும், மனசாட்சியின் அடிப்படையில் பாட மறுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது குறித்து மட்டும் நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று தெளிவுபடுத்தினர். இது தொடர்பாக மத்திய அரசு இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


