இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாகியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகிய மூவர் கொண்ட இந்த அமைப்பில், தலைமை ஆணையரின் செயல்பாடுகள் குறித்து சக ஆணையர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான இந்தத் தகவலின்படி, கடந்த பத்து மாதங்களில் குறைந்தது 14 முறை, தங்களுக்குத் தெரியாமலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஆணையர்கள் சாந்து மற்றும் ஜோஷி அதிருப்தி தெரிவித்துள்ளனர். வாக்காளர் தரவுத்தளத்தின் பாதுகாப்பு, புதிய வாக்காளர் சேர்க்கை முறை மற்றும் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு கட்டத்தில், இது தொடர்பாக இந்திய அரசின் தலைமைச் செயலாளருக்கு அவர்கள் கடிதம் எழுதியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எந்தவொரு நிறுவனத்திலும் முடிவெடுக்கும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது இயல்பானது என்று தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஓராண்டில் ஆணையம் மேற்கொண்ட 40-க்கும் மேற்பட்ட புதிய முன்னெடுப்புகள் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் அனைத்தும் முழு ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டவை என்று ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் 'சிறப்பு தீவிர திருத்த' (SIR) பணிகளின் நோக்கம், இறந்தவர்கள், வெளிநாடு சென்றவர்கள் அல்லது ஒரே நபர் பல இடங்களில் பதிவு செய்துள்ள பெயர்களை நீக்கி, வாக்காளர் பட்டியலைச் சீரமைப்பதே என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தச் செயல்பாட்டின் மூலம் சுமார் 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதும், பல வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் பட்டியலில் விடுபட்டுள்ளதாகப் புகார் தெரிவிப்பதும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், இது அரசியலமைப்புக்கு எதிரான செயல் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதே அந்த மாநிலத்தில் தாங்கள் தோல்வியடையக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.
ஒய். குரேஷி, ஆணையர்கள் சாந்து மற்றும் ஜோஷி அமைதியாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதை வரவேற்றுள்ளார். இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சி இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளது.
இது எதிர்க்கட்சிகளின் அவதூறு பிரச்சாரம் என்று கூறியுள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, தேர்தல் தோல்விகளைத் தாங்க முடியாமல் எதிர்க்கட்சிகள் நாட்டின் ஜனநாயக அமைப்புகளைச் சிதைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுக்க தலைமை தேர்தல் ஆணையர் உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
