ஈரானின் அணுசக்தி திட்டத்தில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும், முடக்கப்பட்ட நிதியை விடுவிக்கவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் பல வாரங்களாக முடங்கியிருந்த நிலையில், கத்தார் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் முயற்சியால் தற்போது மீண்டும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்திய மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஈரான் தரப்பில் சில நெகிழ்வுத்தன்மை காணப்படுவதாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், இரு தரப்பு உறுதிமொழிகளைச் செயல்படுத்துவதில் இன்னும் பெரிய இடைவெளிகள் நீடிக்கின்றன. தெஹ்ரானின் அணுசக்தித் திட்டத்தில் தெளிவான உத்தரவாதங்களை அமெரிக்கா கோரி வரும் நிலையில், கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்க வேண்டும் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் உள்ள கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை என நியூயார்க்கில் உள்ள ஈரான் தூதுக்குழு தெரிவித்துள்ளது. கத்தார் மத்தியஸ்தர்கள் மூலமாகத் தங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே வாஷிங்டனிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ள ஈரான் தூதுக்குழு, தாயகம் திரும்பத் தயாராகி வருகிறது.



