மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஷாஹி மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் திங்கள்கிழமை பதற்றம் நிலவியது. இந்த இடிப்புப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதால், அவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்.
2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சிம்ஹஸ்த கும்பமேளாவுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக இந்த சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. ஷாஹி மசூதி வளாகத்தைச் சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், விரைவு அதிரடிப்படையினரும் (RAF) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து உஜ்ஜைன் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா கூறுகையில், 'மசூதி நிர்வாகமே முன்வந்து இடிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில சமூக விரோதிகள் கலவரத்தை உருவாக்க முயன்று போலீஸார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் லேசான தடியடி பயன்படுத்தப்பட்டது.
தற்போது அப்பகுதி முழுவதும் சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்' என்று தெரிவித்தார். மேலும், சாலை மறியலில் ஈடுபட முயன்ற பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கலைந்து செல்ல வைக்கப்பட்டதாகவும், தற்போது சாலை போக்குவரத்து சீராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், காங்கிரஸ் எம். பி. இம்ரான் பிரதாப்கர்ஹி இந்த இடிப்பு நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'600 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க மசூதியை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இடிப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது தவறான முன்னுதாரணம்' என்று அவர் விமர்சித்தார். இதற்கிடையில், உஜ்ஜைன் நகர காஜி கலீகுர் ரஹ்மான், முஸ்லிம் சமூகத்தினர் அமைதி காக்குமாறும், வதந்திகளை நம்பி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மசூதி தொடர்பான விவகாரம் ஏற்கனவே பேசித் தீர்க்கப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். 2028 சிம்ஹஸ்த கும்பமேளாவுக்காக உஜ்ஜைனில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சுமார் 272 கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முதல்வர் மோகன் யாதவ் தனது பூர்வீக வீட்டை இடிப்புப் பணிக்காகத் தானாக முன்வந்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

