எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டான 'ஸ்டார்ஷிப்', தனது 14-வது சோதனை முயற்சியாக இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் தளத்திலிருந்து, மத்திய நேரப்படி காலை 7:15 மணிக்கும் (இந்திய நேரப்படி மாலை 5:45 மணிக்கும்) இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது.
இந்த ஏவுதலுக்கான கால அவகாசம் 75 நிமிடங்கள் ஆகும். ஸ்டார்ஷிப் ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதைக்குச் செல்வது இதுவே முதல்முறை என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக, 26 ஸ்டார்லிங்க் வி3 (Starlink V3) செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவது திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய தலைமுறை செயற்கைக்கோள்கள், முந்தைய வி2 ரகத்தை விட 10 மடங்கு கூடுதல் டவுன்லிங்க் திறனையும், 22 மடங்கு கூடுதல் அப்லிங்க் திறனையும் கொண்டுள்ளன. இவை தலா 1 டெராபிட் (Tbps) டவுன்லிங்க் மற்றும் 160 ஜிகாபிட் (Gbps) அப்லிங்க் தரவு பரிமாற்றத் திறனை வழங்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விண்ணில் ஏவப்பட்ட பிறகு, இந்த செயற்கைக்கோள்கள் தங்களின் ஆன்டெனாக்கள் மற்றும் சூரிய சக்தி தகடுகளை விரித்து, ரேடியோ மற்றும் லேசர் இணைப்புகள் மூலம் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தும்.
சில வாரங்களுக்குள் இவை வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வழங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 407 அடி உயரம் கொண்ட இந்த ராக்கெட், பூமியிலிருந்து 275 கி. மீ உயரத்தில், சுமார் 10 மணி நேரப் பயணத்தில் பூமியை ஆறு முறை சுற்றி வரும்.
இறுதியில், சிலி நாட்டுக்கு மேற்கே பசிபிக் பெருங்கடலில் இந்த ராக்கெட் தரையிறக்கப்படும். இதற்கிடையில், சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட், மெக்சிகோ வளைகுடாவில் உள்ள கடல் பகுதியில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முந்தைய சோதனைகளில் ஏற்பட்ட சிக்கல்களைக் களைந்து, வன்பொருள் மற்றும் மென்பொருளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஸ்டார்ஷிப்பின் வெப்பத் தடுப்பு கவசத்தை ஆய்வு செய்ய மூன்று செயற்கைக்கோள்களில் பிரத்யேக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எதிர்கால பயணங்களில் ராக்கெட்டை மீண்டும் ஏவுதளத்திற்கே கொண்டு வரும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இந்தத் தரவுகள் உதவும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்த முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தை, 'ராக்கெட் அறிவியலின் புனிதக் கோப்பை' (Holy grail of rocketry) என்று அந்நிறுவனம் வர்ணிக்கிறது.
நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் குடியேறுவது உள்ளிட்ட விண்வெளி ஆய்வுகளின் புதிய பரிமாணங்களுக்கு இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் வழிவகுக்கும் என்று ஸ்பேஸ்எக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

