செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கூகுள், ஓபன் ஏஐ (OpenAI) மற்றும் ஆந்த்ரோபிக் (Anthropic) ஆகிய முன்னணி நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய தன்னாட்சி அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. 'ஸ்டாண்டர்ட்ஸ் அத்தாரிட்டி ஃபார் ஃபிரான்டியர் ஏஐ' (SAFA) என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு, 2026-ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்று 'தி இன்ஃபர்மேஷன்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு எந்தவொரு அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுவதற்காக, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஏஐ கொள்கை ஆலோசகர் ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்த்தி பிரபாகர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனங்களின் முக்கிய நோக்கம், ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்த நடைமுறை அளவுகோல்களை வரையறுப்பதும், புதிய ஏஐ மாடல்களைச் சந்தைக்குக் கொண்டு வருவதற்கு முன்பாக அவற்றை மதிப்பீடு செய்யும் டெவலப்பர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதும் ஆகும். தற்போது அமெரிக்காவில் 'சென்டர் ஃபார் ஏஐ ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் இன்னோவேஷன்' என்ற அரசு அமைப்பு இருந்தாலும், சிக்கலான ஏஐ தொழில்நுட்பங்களை முழுமையாக ஆய்வு செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகள் அந்த அமைப்பிடம் இல்லை என்ற கவலை நிலவுகிறது.
எனவே, SAFA அமைப்பு நேரடியாக ஏஐ மாடல்களை மதிப்பீடு செய்ய வேண்டுமா என்பது குறித்து இந்த நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. இந்த கூட்டு முயற்சி குறித்து கடந்த சில வாரங்களாகவே தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் ஆல்பாபெட்டின் தலைமை விஞ்ஞானி சர் டெமிஸ் ஹசாபிஸ், கடந்த ஜூலையில் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பரிந்துரையைத் தொடர்ந்து இந்த முன்னெடுப்புகள் வேகம் பெற்றுள்ளன.
நிதித் துறை ஒழுங்குமுறை ஆணையத்தைப் (FINRA) போன்ற ஒரு பொது-தனியார் கூட்டாண்மை அல்லது சுய-ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். மேலும், ஏஐ மாடல்களை வெளியிடுவதில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி சமீபத்தில் வெளியிட்ட கட்டுரை, இந்த கூட்டு முயற்சிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
வணிக ரீதியாக கடும் போட்டியில் இருந்தாலும், ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பேரழிவு அபாயங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்து வருவதால், இந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன.


