வங்கி ஊழியர்களின் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான ஊதியம் இன்று (செப்டம்பர் 25) முன்கூட்டியே வழங்கப்படுகிறது. வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை வங்கி ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இதனால் மாதத்தின் கடைசி நாளான செப்டம்பர் 30-ம் தேதி வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 2 முதல் 4-ம் தேதி வரை வார விடுமுறை நாட்கள் வருவதால், வங்கிகளின் செயல்பாடுகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக, செப்டம்பர் 25-ம் தேதியே ஊதியத்தை வழங்க மத்திய நிதித் துறையின் தலைமைக் கணக்கு அதிகாரி அலுவலகம் (சிஜிஏ) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், வங்கிச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வங்கி வேலைநிறுத்த நாட்களில் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைகளுக்கு மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், யுபிஐ மற்றும் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்று வங்கி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
மேலும், வங்கிச் சேவைகளைப் பாதிப்பின்றித் தொடர, செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என்றும் மத்திய நிதித் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் முடிவைப் பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியத்தை இன்று வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நிதித்துறை செயலர் எம்.
ஏ. சித்திக் அனைத்துத் துறை செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வங்கி வேலைநிறுத்தம் மற்றும் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத ஊதியப் பட்டியலைத் தயாரித்து, செப்டம்பர் 25-ம் தேதியே ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கேற்ப, கருவூல கணக்கு இயக்குநர் டி.
சாரு அனைத்து ஊதியக் கணக்கு அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஊதியம், தினக்கூலி மற்றும் ஓய்வூதியப் பட்டியல்களை 30-ம் தேதி வரை காத்திருக்காமல், செப்டம்பர் 25-ம் தேதியே தயாரித்து மின்னணு முறையில் தீர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.




