தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் இணையவழியில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையில், பதிவுத்துறை முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி, இனி பத்திரப்பதிவிற்கு கட்டணம் செலுத்திப் பெறப்படும் வில்லங்கச் சான்றிதழுக்குப் பதிலாக, இணையதளத்தில் இலவசமாகப் பெறப்படும் வில்லங்கச் சான்றிதழையே சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு, மனை வாங்குவதற்கான பத்திரங்கள் மற்றும் அடமான ஆவணங்களைப் பதிவு செய்யும்போது இந்த புதிய நடைமுறை பொருந்தும்.
இது தொடர்பாக பதிவுத்துறை ஐ. ஜி.அருண் சுந்தர் தயாளன் பிறப்பித்துள்ள உத்தரவில், கடன் நிறைவு தொடர்பான ரசீதுகளைப் பதிவு செய்யும்போது வில்லங்கச் சான்று சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், நேரடி வருகையில்லா பத்திரப்பதிவு முறையில் விடுமுறை நாட்களுக்கான கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் நுழைவு வாயில் (Citizen Portal) வழியாகச் சமர்ப்பிக்கப்படும் ஆவண ஒப்படைப்பு அடமானப் பத்திரங்கள் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
அதேசமயம், நேரடி வருகையில்லா பத்திரப்பதிவு முறையில் ஆவணதாரர் எங்கிருந்தும் இணையவழியில் பதிவு செய்ய முடியும் என்பதால், 'பிரசன்டேஷன் பவர்' எனப்படும் சிறப்பு பொது அதிகார ஆவணங்களைப் பயன்படுத்த முடியாது என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.




