இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், டெஸ்லா நிறுவனம் சென்னையில் புதிய அனுபவ மையத்தைத் திறக்கவுள்ளது. ஹைதராபாத் மற்றும் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில் அமையும் மூன்றாவது மையம் இதுவாகும். இதன் மூலம் நாடு முழுவதும் டெஸ்லாவின் மையங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் 38 டெஸ்லா வாகனங்கள் விற்பனையாகியுள்ள நிலையில், இந்த புதிய மையம் விற்பனையை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் இந்தியா முழுவதும் 600-க்கும் மேற்பட்ட டெஸ்லா வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன; இதில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 150 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது இந்திய சந்தையில் மாடல் ஒய் (Model Y) ரகத்தில் இரண்டு வேரியண்டுகளை டெஸ்லா விற்பனை செய்கிறது. இதன் பிரீமியம் ரியர்-வீல் டிரைவ் மாடல் 50.89 லட்சம் ரூபாயிலும், ஆல்-வீல் டிரைவ் மாடல் 61.99 லட்சம் ரூபாயிலும் தொடங்குகிறது. இந்த வாகனங்களை நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து, நாடு முழுவதும் டெலிவரி பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவின் சொகுசு மின்சார வாகன சந்தையில் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ்-பென்ஸ், போர்ஷே, வோல்வோ மற்றும் பிஒய்டி உள்ளிட்ட நிறுவனங்கள் 2026-ம் ஆண்டில் மட்டும் சுமார் 19,700 வாகனங்களை விற்பனை செய்துள்ளன. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வீட்டு சார்ஜிங் வசதிகளை வழங்குவதோடு, சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கு டெஸ்லா முன்னுரிமை அளித்து வருகிறது.



