செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் தாக்கம் குறித்த உலகளாவிய விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கம் அளிக்க ஏஐ நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) அழைக்கப்பட்டுள்ளனர். வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடி மற்றும் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக ஐ.
நா. செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் சாம் ஆல்ட்மேன் நேரில் கலந்துகொள்கிறார், டாரியோ அமோடி காணொளி வாயிலாக உரையாற்றுகிறார்.
இவர்களுடன் ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) நிறுவனத்தின் சிஇஓ கிளமென்ட் டெலாங்கு மற்றும் ஐ. நா. வின் ஏஐ தொடர்பான குழுவின் இணைத் தலைவர் யோசுவா பெங்கியோ ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று டாரியோ அமோடி மற்றும் சாம் ஆல்ட்மேன் ஆகிய இருவரும் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர். அதே சமயம், தங்கள் நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டிலும் அவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், ஏஐ தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவது குறித்து அமெரிக்காவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள அரசு விருந்தில் சாம் ஆல்ட்மேன் பங்கேற்க உள்ளார். இந்த விருந்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் கூகுள், மைக்ரோசாப்ட், என்விடியா ஆகிய நிறுவனங்களின் சிஇஓக்கள், டிம் குக், ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



