தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கு மன்னிக்க முடியாத துரோகம் என்று சாடியுள்ளார்.
சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி, கல்வி உதவி என்ற பெயரில் விளிம்பு நிலை பெண் குழந்தைகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டது ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனியச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஜெம் வீரமணி மீது ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டும், காவல்துறையினர் வழக்கை நீர்த்துப்போகச் செய்ததும், கைது நடவடிக்கைகளைத் தவிர்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது என்று சீமான் விமர்சித்துள்ளார்.
பெண் குழந்தை வன்கொடுமை தொடர்பான காணொளி ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டும், குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறியது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில் சிறப்பு போக்சோ நீதிமன்றம் தலையிட்டு, காவல்துறையின் அறிக்கையை நிராகரித்து நடவடிக்கை கோரியதால்தான் நீதி கிடைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெம் வீரமணி கடந்த 40 ஆண்டுகளாக இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் பின்னணியில் உள்ள வலைப்பின்னலைக் கண்டறிந்து, உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திரசிம்மன் உள்ளிட்ட அனைவரையும், அவர்களுக்குத் துணை நின்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சீமான் கோரியுள்ளார்.
மேலும், குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயன்ற காவல்துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பணமும் அதிகாரமும் இருந்தால் சட்டத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணமே இத்தகைய குற்றங்கள் தொடரக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பெண்களுக்கான பாதுகாப்பு என்பது வெறும் வாக்கு வங்கி அரசியலாக மாறிவிட்டதாக விமர்சித்த சீமான், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே உண்மையான பெண்ணுரிமை என்றார். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலமே இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





