இத்தாலியின் முன்னணி தனியார் வங்கியான இன்டேசா சான் பாவ்லோவின் ஒரு பிரிவான ஃபிடியூரம் வங்கியில், செயற்கை நுண்ணறிவு (ஏ. ஐ. ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 1,034 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், ஃபிடியூரம் வங்கியின் தலைவர் பாவ்லோ மொலேசினிக்கு, வங்கியின் தலைமை செயல் அதிகாரி கார்லோ மெஸ்ஸினாவிடமிருந்து வந்ததாகக் கூறி வாட்ஸ்அப் செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், வெளிநாட்டில் அவசர நிதி பரிவர்த்தனை ஒன்றை மேற்கொள்ள உதவுமாறு கோரப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து, ஒரு பிரபல சட்ட நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர் பேசுவது போன்ற தொலைபேசி அழைப்பு ஒன்று மொலேசினிக்கு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், வாட்ஸ்அப் மூலம் வந்த உத்தரவு உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வழக்கறிஞரின் பேச்சை நம்பிய மொலேசினி, வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப உத்தரவிட்டார்.
இதன்படி, பல கட்டங்களாக மொத்தம் 9. 5 கோடி யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 1,034 கோடி ரூபாய்) பரிமாற்றம் செய்யப்பட்டது. பணத்தை அனுப்பிய பின்னரே, இது ஏ.
ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட மோசடி என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

