திருப்பதி மாவட்டம் ஸ்ரீ சிட்டியில் உள்ள டிஐஎல் (TIL) ஹெல்த்கேர் மருந்து தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட கொதிகலன் வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்தவுடன் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய மாநில உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதா சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் உரிய ஆதரவு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
திருப்பதி மக்களவை உறுப்பினர் மத்திலா குருமூர்த்தி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். விபத்து நடந்த சூழல் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.





