டெல்லியில் பெண் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பலரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே இந்த போராட்டம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் 3-ம் தேதி, ஜந்தர் மந்தர் பகுதியில் தலைமை தேர்தல் ஆணையர் கியான் குமார் வருகைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, பெண் பத்திரிகையாளர்கள் மூவர் காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, பாரபட்சமற்ற விசாரணைக்காக புகார்கள் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், புகார் அளித்து 48 மணிநேரம் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதன் தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக போராட்டக்காரர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "காவல்துறையினர் எங்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள். எங்கள் புகாரின் தற்போதைய நிலை என்ன என்பதை அறியவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்று கூறினார். இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக சிஜேபி (CJP) அமைப்பு களமிறங்கியுள்ளது.
அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் பிற போராட்டக்காரர்கள், இந்த வழக்கில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சௌரவ் தாஸ், "டெல்லி காவல்துறை தனது பாலியல் குற்றவாளியான விவேக் பகத்தை பாதுகாக்கிறது. எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கிறது.
எழுத்துப்பூர்வமான புகார் மற்றும் வீடியோ ஆதாரங்களை விசாரிக்க அவகாசம் கோரியுள்ளனர். இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.





