டெல்லியில் 'லெஹ்ரா தோ திரங்கா' போராட்ட பேரணிக்கு முன்னதாக, காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கேவை டெல்லி காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் 126 மற்றும் 170-வது பிரிவுகளின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்று சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார். திப்கேவை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவருக்கு சட்ட ஆலோசனை பெறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சிஜேபி கட்சியின் சட்டப்பிரிவு தலைவர் ரத்னா சிங் தெரிவித்துள்ளார்.
இதே போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவர் நேகா போரா, டெல்லி காவல் சட்டத்தின் கீழ் நடைமுறைகளை முடித்த பிறகு சனிக்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டார். விடுதலையான பிறகு பேசிய நேகா போரா, இந்த கைது நடவடிக்கைகள் குடிமக்களை அச்சுறுத்தும் உத்தி என்று விமர்சித்ததுடன், திப்கே மற்றும் பிற போராட்டக்காரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தலைமை தேர்தல் ஆணையர் கியான்ேஷ் குமார் பதவி விலகக் கோரி பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் குளறுபடிகள் உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.




