2025-26-ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு, கொல்கத்தா நகரைச் சேர்ந்த லாட்டரி நிறுவனம் ஒன்று ரூ. 260 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, முந்தைய நிதியாண்டை விட இந்த நன்கொடைத் தொகை இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இந்த இரு கட்சிகளும் 2025-26-ஆம் ஆண்டில் பெற்ற மொத்த நன்கொடையான ரூ. 352. 55 கோடியில், சுமார் 74 சதவீத பங்களிப்பை இந்த ஒரே நிறுவனம் வழங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
'டைகர் அசோசியேட்ஸ்' (Tiger Associates) என்ற அந்த நிறுவனம், 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ. 110 கோடியை இரு கட்சிகளுக்கும் வழங்கியிருந்தது. இந்நிலையில், 2025-26-ஆம் ஆண்டில் அதிமுகவுக்கு ரூ.
135 கோடியும், திமுகவுக்கு ரூ. 125 கோடியும் வழங்கியுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்நிறுவனம் இரு கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.
370 கோடி வழங்கியுள்ளது. அதிமுகவின் தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி, லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினுடன் வணிகத் தொடர்பு கொண்ட டைகர் அசோசியேட்ஸ், ஆறு தவணைகளாக ரூ. 135 கோடியை வழங்கியுள்ளது.
இது அதிமுகவின் மொத்த நன்கொடையான ரூ. 161. 36 கோடியில் சுமார் 84 சதவீதமாகும்.
அதேபோல், திமுகவின் ஆவணங்களில், டைகர் அசோசியேட்ஸ் 14 தவணைகளாக ரூ. 125 கோடி வழங்கியிருப்பது பதிவாகியுள்ளது. இது திமுகவின் மொத்த நன்கொடையான ரூ.
191. 19 கோடியில் 65 சதவீதத்திற்கும் அதிகமாகும். டைகர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான சுப்பையன் நடராஜன், சாண்டியாகோ மார்ட்டினின் நீண்டகால வணிக கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ட்டினின் 'பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ்' நிறுவனம், தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, திமுகவுக்கு ரூ. 509 கோடி நன்கொடை வழங்கியிருந்தது. இருப்பினும், டைகர் அசோசியேட்ஸ் மற்றும் பியூச்சர் கேமிங் ஆகிய இரண்டும் தனித்தனி நிறுவனங்கள் என்றும், மார்ட்டின் நேரடியாக இந்த நன்கொடைகளை வழங்கியதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, தேர்தல் அறக்கட்டளைகளும் திமுக மற்றும் அதிமுகவுக்கு நிதி வழங்கியுள்ளன. ட்ரையம்ப் தேர்தல் அறக்கட்டளை திமுகவுக்கு ரூ. 15 கோடியும், அதிமுகவுக்கு ரூ.
5 கோடியும் வழங்கியுள்ளன. ஜெயபாரத் தேர்தல் அறக்கட்டளை முறையே ரூ. 4 கோடி மற்றும் ரூ.
3 கோடியை வழங்கியுள்ளன. புருடென்ட் தேர்தல் அறக்கட்டளை திமுகவுக்கு ரூ. 25 கோடி வழங்கியுள்ளது.
இந்த மூன்று அறக்கட்டளைகள் மற்றும் டைகர் அசோசியேட்ஸ் நிறுவனம் இணைந்து, இரு கட்சிகளுக்கும் மொத்தம் ரூ. 312 கோடியை வழங்கியுள்ளன. இது இரு கட்சிகளும் பெற்ற மொத்த நன்கொடையில் சுமார் 88.
5 சதவீதமாகும். தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற பிப்ரவரி மற்றும் மார்ச் 2026 மாதங்களில் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்து, நடிகர் விஜய் தொடங்கிய தவெக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.




