டெல்லியில் நாளை நடைபெறவுள்ள சிஜேபி அமைப்பின் மூவர்ணக் கொடி போராட்டத்துக்குத் தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கன்னோட் பிளேஸ் பகுதியில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் வணிகத்தைப் பாதிக்கும் எனக் கூறி வணிகர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை, தற்காலிக தலைமை நீதிபதி நிதின் வாசுதேயோ சாம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சர்மா அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா, போராட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மனுதாரரின் அச்சம் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, மத்திய அரசு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டினார். நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றிக்கு ஞானேஷ் குமார் உதவுவதாலேயே அவருக்கு இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுவதாக அவர் விமர்சித்தார்.
