தேர்தல் முறைகேடு புகார்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, கன்னாட் பிளேஸில் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்த 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே, வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சனிக்கிழமை டெல்லி நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, ரூ. 50,000 மதிப்பிலான பிணைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட திப்கே, இனி அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என்று உறுதியளித்ததை அடுத்து, மந்திர் மார்க் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். விடுதலையான பிறகு, 'வீர்-ஸாரா' திரைப்படத்தில் ஷாருக்கான் சிறையிலிருந்து வெளிவரும் காட்சியை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்து, '24 மணிநேரம் வைஃபை மற்றும் போன் இல்லாமல் சிறையில் இருந்து வெளியே வரும்போது எப்படி இருக்கிறது' என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, அக்டோபர் 10-ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் விமானத்திற்குள் வைத்து திப்கே தடுத்து நிறுத்தப்பட்டபோது, ஓராண்டுக்கு அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என அவர் பிணைப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை மாலை கன்னாட் பிளேஸில் 'லேரா தோ திரங்கா' என்ற பெயரில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதையொட்டி, சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் சுமார் 150 பேர் தடுத்து வைக்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதி காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டு, விரைவு அதிரடிப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பேரணியில் பங்கேற்கவிருந்த அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவர் நேகா போரா, வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டார்.
டெல்லி காவல் சட்டத்தின் கீழ் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், திப்கே மீது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் 126 மற்றும் 170-வது பிரிவுகளின் கீழ் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையே, ஜந்தர் மந்தர் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, சிஜேபி தலைவர்கள் அசுதோஷ் ரன்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலையான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேகா போரா, காவல்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று குற்றம் சாட்டினார். 'மண்டி ஹவுஸில் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிகாலை 5 மணி வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டேன். சட்டப்படி நடப்பதாகக் கூறும் காவல்துறை, இத்தகைய சட்டவிரோதக் கைதுகளை ஏன் செய்கிறது?
' என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் கியான்ேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் தனது முடிவுகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டவை என்று கூறி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் போராட்டங்கள் 'வெளிநாட்டு நிதியுதவியுடன் நடக்கும் குழப்பத்தை உருவாக்கும் முயற்சி' என்று பாஜக விமர்சித்துள்ளது.



