திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை நாளை முதல் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவு செயல்முறை நாளை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
நாளை காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் குலுக்கல் முறையில் முன்பதிவு செய்யலாம். தொடர்ந்து 22-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு நடைபெறும்.
ஜனவரி 23-ம் தேதி அங்கபிரதட்சன டோக்கன்கள், வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும். இறுதியாக 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும், மதியம் 3 மணிக்கு தங்கும் அறைகளுக்கான டிக்கெட்டுகளும் முன்பதிவுக்குக் கிடைக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.




