கடந்த வாரம் பங்குச்சந்தையில் காணப்பட்ட ஏற்றம் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்த நிலையில், திங்கள்கிழமை (அக்டோபர் 19) மீண்டும் விற்பனை அழுத்தம் காரணமாக சந்தை சரிவைச் சந்தித்தது. வங்கிப் பங்குகளின் வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை முதலீட்டாளர்களின் மனநிலையைப் பாதித்ததால், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 876 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 257 புள்ளிகள் சரிவைச் சந்தித்தது. கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த சந்தை, இந்த சரிவின் மூலம் அந்த வெற்றியைத் தக்கவைக்கத் தவறியது. பெரிய நிறுவனங்களின் பங்குகள் மட்டுமின்றி, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன.
இந்த வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ. 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, வெள்ளிக்கிழமை முடிவில் ரூ.
4,72,62,167 கோடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை முடிவில் ரூ. 4,67,46,191 கோடியாகக் குறைந்துள்ளது. இந்தச் சரிவுக்கு முக்கியமாக மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
முதலாவதாக, தனியார் வங்கிப் பங்குகளின் வீழ்ச்சி சந்தையை வெகுவாகப் பாதித்துள்ளது. செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளைத் தொடர்ந்து, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிந்தன. குறிப்பாக, எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் சுமார் 3 சதவீதம் சரிந்தன.
ஆக்சிஸ் வங்கியின் காலாண்டு செயல்பாடு சந்தை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாததால், அதன் பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்தன. இந்த மூன்று வங்கிகளின் பங்குகள் மட்டுமே சென்செக்ஸ் சரிவில் பாதியளவு பங்களித்துள்ளன. இரண்டாவதாக, கச்சா எண்ணெய் விலை உயர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 108-109 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றம் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிப்பதோடு, ரூபாய் மதிப்பையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
மூன்றாவதாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றம் தொடர்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து சுமார் ரூ. 52,100 கோடியை வெளியேற்றியுள்ளனர்.
இது இந்த ஆண்டின் மிக அதிக அளவிலான வெளியேற்றங்களில் ஒன்றாகும். செப்டம்பர் மாதத்தில் ரூ. 35,861 கோடி வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கப் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு மற்றும் டாலரின் வலுவான நிலை ஆகியவை வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறக் காரணமாகின்றன. இது குறித்து மூத்த பொருளாதார நிபுணர் பேராசிரியர் அபினவ் திரிபாதி கூறுகையில், 'நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், கச்சா எண்ணெய் விலை மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வரத்து ஆகியவற்றைப் பொறுத்தே சந்தையின் அடுத்தகட்ட நகர்வு அமையும்.
முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் லாபம் மற்றும் நுகர்வோர் தேவை குறித்த தரவுகளை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். வங்கிப் பங்குகளின் லாப வரம்பு மற்றும் சொத்துத் தரம் ஆகியவை சந்தையின் கவனத்தில் இருக்கும்' என்று தெரிவித்தார். மேலும், மத்திய கிழக்கில் நிலவும் சூழல் கச்சா எண்ணெய் விலையைத் தொடர்ந்து உயர்த்தினால், அது பணவீக்கத்தை அதிகரித்து இந்தியப் பங்குச்சந்தையின் மீட்சியைத் தடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.





