அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன ராணுவத்துடன் மோதல்கள் நீடிப்பதாக இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் (ITBP) தலைமை இயக்குநர் தெரிவித்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஐடிபிபி தலைமை இயக்குநர் பேசிய வீடியோ பதிவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள கார்கே, இந்தியாவின் தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். டோக்லாம் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களைத் தொடர்ந்து, தற்போது அருணாச்சலப் பிரதேசத்திலும் அதேபோன்றதொரு சூழல் நிலவுகிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் டாக்ஸிங் அருகே சீன ஊடுருவல் நடந்ததாக வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டிய அவர், படைத் தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்து 47 நாட்கள் கடந்தும் மோதல்கள் தொடர்வது ஏன் என்று வினவியுள்ளார். இந்தியாவின் ரோந்துப் பணிக்கான அணுகல் தடைபட்டுள்ளதா என்றும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், இது குறித்து ஏன் தேசத்தை இருட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார்.
பொருளாதார ரீதியாக சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 155 சதவீதம் அதிகரித்து 112. 16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதையும், கல்வான் மோதலுக்குப் பிறகு சீன இறக்குமதிகள் 102 சதவீதம் அதிகரித்துள்ளதையும் கார்கே சுட்டிக்காட்டினார். இந்திய ஏற்றுமதிகளை சீனா தடுப்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சீன நிறுவனங்களுக்கு பிஎல்ஐ (PLI) சலுகைகளை வழங்க அரசு பரிசீலிப்பது 'மேக் இன் இந்தியா' திட்டத்தை 'சீன இறக்குமதி' திட்டமாக மாற்றிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.
கல்வான் மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 23 முறை சந்தித்துப் பேசியுள்ளதையும், பல்வேறு தூதரக மற்றும் ராணுவ ரீதியான பேச்சுவார்த்தைகள் நடந்ததையும் குறிப்பிட்ட கார்கே, இந்தச் சந்திப்புகளால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பினார். மே 2020-க்கு முந்தைய இந்தியாவின் ரோந்து உரிமைகள் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளனவா என்று வினவிய அவர், 'நமது படைகள் மீது முழு நம்பிக்கை உள்ளது.
ஆனால், தேசிய பாதுகாப்புக்கு பொறுப்புக்கூறல் அவசியம். ராஜதந்திர சந்திப்புகளின்போது நிகழும் ஆரத்தழுவல்களும் புகைப்படங்களும் மட்டும் தீர்வாகாது. எதிர்க்கட்சிகளைத் தாக்குவதை விடுத்து, பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் உண்மையைச் சொல்லி நம்பிக்கை அளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.




