பிரான்ஸ் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின் போது சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றாலும், பாரிஸ், மார்செய், போர்டோ மற்றும் லியோன் ஆகிய நகரங்களில் மோதல்கள் வெடித்தன. கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும், நீர்ப் பீரங்கிகளையும் பயன்படுத்தினர்.
இந்தத் தொடர் போராட்டங்களில் 4,10,000 பேர் பங்கேற்றதாக உள்துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. ஆனால், தொழிற்சங்கங்கள் இந்த எண்ணிக்கை 8,00,000 வரை இருக்கலாம் எனக் கூறியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க 70,000 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த வார இறுதியில் நடைபெற்ற வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தவிர்க்க, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த போராட்டங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த வன்முறையில் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் உறுதிப்படுத்தியுள்ளார். வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் கல்விச் சூழல் குறித்த தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தவே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.



