பிரான்சில் ஷமோண்டா வைரஸ் (Shav) மனிதருக்குப் பரவிய முதல் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாதத் தொடக்கத்தில் உயிரிழந்த நோயாளி ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்த அந்த நோயாளிக்கு, லியோன் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோது நரம்பியல் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்த பாதிப்பு வைரஸுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதார மற்றும் வேளாண் அமைச்சகங்கள், பாதிக்கப்பட்ட நோயாளிக்கு கிழக்கு பிரான்சில் வைத்து ஈக்களின் (midges) கடி மூலம் இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளன. இந்த பகுதியில் உள்ள விலங்குகளிடையே கடந்த வசந்த காலத்திலேயே இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.
பொதுவாக ஷமோண்டா வைரஸ் கால்நடைகளை மட்டுமே பாதிக்கும் நோயாகக் கருதப்படுகிறது. ஆடு, மாடு, குதிரை மற்றும் அல்பாகா போன்ற விலங்குகளைப் பாதிக்கும் இந்த வைரஸ், மனிதர்களுக்குப் பரவாது என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பல தசாப்தங்களாக இந்த வைரஸ் விலங்குகளிடையே பரவி வந்தாலும், மனிதர்களுக்குப் பரவியதாக இதுவரை எந்தப் பதிவும் இல்லை.
எனவே, இது மிகவும் அரிதான மற்றும் விதிவிலக்கான நிகழ்வு என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது பொதுமக்களுக்கு இதனால் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து, இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவியதற்கான காரணங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஐரோப்பாவில் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அயர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜெர்சி உள்ளிட்ட நாடுகளில் உள்ள பண்ணை விலங்குகளிடம் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.




