அமெரிக்காவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக, கிரீன் கார்டு வைத்திருக்கும் 2 இந்தியர்கள் உட்பட 28 வெளிநாட்டினர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க நீதித்துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் 'ஆபரேஷன் புரோடெக்ட் தி வோட்' (Operation Protect the Vote) என்ற பெயரில் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த 2 இந்தியர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவார்களா என்பது குறித்த தெளிவான தகவல் உடனடியாக வெளியாகவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சாக்ரமென்டோவைச் சேர்ந்த கமலேஷ் ஷா (67) மற்றும் ரான்சோ பாலோஸ் வெர்டெஸைச் சேர்ந்த அமன்தீப் கவுர் (30) ஆகிய இருவரும் இந்தியர்கள் ஆவர். இதில் கமலேஷ் ஷா, கடந்த நவம்பர் 2024 பொதுத்தேர்தல் நாளன்று முறைகேடாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து, அதே நாளில் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.
மற்றொருவரான அமன்தீப் கவுர், அமெரிக்கக் குடியுரிமை பெற முயற்சி செய்து வருபவர். இவர் டிசம்பர் 2022-ல் முறைகேடாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து, நவம்பர் 2024 தேர்தலில் வாக்களித்ததாக நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 28 பேரும் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கும் 'கிரீன் கார்டு' வைத்திருப்பவர்கள் (LPRs) என்று நீதித்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இவர்களுக்கு அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கும் உரிமை இருந்தாலும், அமெரிக்கக் குடிமக்கள் அல்லாத இவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதி இல்லை என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது குடியுரிமை விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்தது மற்றும் முறைகேடாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவை கூட்டாட்சி சிறையில் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கக்கூடிய குற்றங்களாகும். இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய செயல் துணை அட்டர்னி ஜெனரல் ட்ரெண்ட் மெக்கோட்டர், 'குற்றம் சாட்டப்பட்ட 28 பேரும், கடந்த வாரம் கலிபோர்னியா தேர்தல் அதிகாரிகளிடம் நாங்கள் வழங்கிய 20,000-க்கும் மேற்பட்ட குடிமக்கள் அல்லாத வாக்காளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்' என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு இதுவரை தேர்தல் தொடர்பான பல்வேறு முறைகேடுகளுக்காக சுமார் 90 பேர் மீது அமெரிக்க நீதித்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் 50 பேர் குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


