வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் பரவலைத் தடுப்பது, உயிரிழப்புகளைத் தவிர்ப்பது மற்றும் தடையற்ற மருத்துவச் சேவைகளை வழங்குவது ஆகிய மூன்று முக்கிய இலக்குகளை நோக்கிச் செயல்பட சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை, இதய சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் மின்சாரத் தடை ஏற்படாத வண்ணம் மின்சார வாரியத்துடன் இணைந்து உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் விநியோகம், செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துகள், நரம்புவழி திரவங்கள், கிருமிநாசினிகள், ஓ. ஆர். எஸ் கரைசல்கள், பாம்புக்கடி விஷமுறிவு மருந்துகள் மற்றும் குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை, குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்குத் தேவையான அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



