தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் தொடர்பாக, தமிழக முதல்வர் விஜயை முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்திட்டு வந்த நபர், தனது மனைவி கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளைக் கண்காணிப்பதில் காவல்துறை தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
இதேபோல், சிவகங்கையில் மதன் என்ற ரவுடி ஜாமீனில் வெளிவந்த நிலையில், ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையின் அலட்சியமே இத்தகைய கொலைகளுக்குக் காரணம் என்று அவர் சாடியுள்ளார். பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஐந்து நாட்களுக்குப் பிறகே சடலம் கண்டெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, காவல்துறையின் செயல்பாட்டை அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வேதாரண்யத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதையும், அதே மாவட்டத்தில் 'மெத்' போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக 'மெத்' பூபாலன் என்ற நிர்வாகி கைது செய்யப்பட்டதையும் அவர் பட்டியலிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், "முதல்வரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா? " என்று கேள்வி எழுப்பினார்.
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், முதலில் முதல்வர் தனது கட்சியினரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும், அதற்கு காவல்துறை அவரது நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். காவல்துறையை முதல்வர் முறையாகக் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், "துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதல்வர் பொறுப்பு வகிக்கிறார்.
தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் அவுட்சோர்ஸ் (Out Source) செய்துவிட்டாரா? " என்று வினவினார். தொடர்ந்து அவர் தனது பதிவில், "CM sir, your Negligence is Costing Lives.
Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.





