தமிழகத்தில் சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 18) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் அக்டோபர் 19 முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, 20-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, அவ்வப்போது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 15 செமீ மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருச்சி மாவட்டங்களின் சில பகுதிகளில் தலா 10 முதல் 12 செமீ வரை மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




