நாட்டிலேயே முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி கள ஆய்வை தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்த ஆய்வுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகம் பதிவான பகுதியாக இருந்ததால், கடையநல்லூர் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டக்கேடா நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளன. மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகளாகச் செலுத்தப்படும் இந்தத் தடுப்பூசி, டெங்கு பாதிப்பில் இருந்து 80 முதல் 90 சதவீதம் வரை பாதுகாப்பு அளிக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், தோலில் தடவும் கொசுவிரட்டி மற்றும் மின்சார வேப்பரைசர் மூலம் கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பது குறித்த ஆய்வுகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையின் அடிப்படையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.




