தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த பாதையில், காவல்துறை அனுமதியை மீறி கார்த்திகா செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர் தடுக்கப்பட்ட நிலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக, தேர்தல் பிரசாரத்தின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பிரசாரம் மேற்கொண்டது மற்றும் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கார்த்திகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், கோவையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கார்த்திகா மற்றும் அவரது கணவரை தாராபுரம் காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என்று விமர்சித்துள்ள சீமான், இது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட ஏழு நாம் தமிழர் கட்சியினரையும் பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் கால வழக்குக்காகக் கைது செய்து சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நாகை போதைப்பொருள் கடத்தல் விவகாரம், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் மீதான பாலியல் புகார், சோளிங்கர் எம். எல்.ஏ கபில் மீதான தாக்குதல் வழக்கு மற்றும் திருவைகுண்டம் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகியவற்றில் கைது நடவடிக்கை எடுக்காத தவெக அரசு, அறவழியில் போராடிய கார்த்திகா உள்ளிட்டோர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். "திராவிடக் கட்சிகள் முந்தைய ஆட்சிக் காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா?
கேடுகெட்ட காட்டாட்சி! " என்று சாடியுள்ள சீமான், கைது செய்யப்பட்ட கார்த்திகா மற்றும் கட்சியினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அதற்கான எதிர்விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.




