பிரான்சில் வாழ்க்கைச் செலவு உயர்வைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே. டி. வான்ஸ் ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதியதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களும் தீ வைப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. லிமோஜஸ் நகரில் 140 ஆண்டுகள் பழமையான நகர மண்டபத்தின் கூரை மற்றும் ஒரு பகுதி மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்தச் சூழலை கிண்டல் செய்யும் வகையில் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், 'நாம் பிரான்சுக்குச் செல்வோமா?
அது ஒரு அழகான இடம். அங்கு கலவரங்களோ, புரட்சிகளோ இல்லை. பிரான்ஸ் புரட்சிகளுக்கு மிகவும் ஏற்ற இடமாகத் தெரிகிறது.
இது நம்ப முடியாதது. வாருங்கள், பிரான்சுக்குச் சென்று புரட்சியில் இணைவோம்' என்று குறிப்பிட்டார். இதற்கிடையில், பிரான்சின் தற்போதைய நிலைக்குக் குடியேற்றமே காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், 'மேற்கத்திய தாராளவாதிகள் பன்முகத்தன்மை மற்றும் கருணை என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அவர்கள் கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தன்மை குறித்த அடிப்படை கேள்விகளைப் புறக்கணித்துவிட்டனர். இது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. அழகான மக்களையும், கலாச்சாரத்தையும் கொண்ட பிரான்ஸ், அதன் அடையாளங்கள் எரிவதற்கு முன்பாக இந்தச் சூழலை நிறுத்தும் என்று நான் பிரார்த்திக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க மக்களிடம் எச்சரிக்கை விடுத்த அவர், 'அமெரிக்கர்கள் இதைக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் உங்கள் நாட்டிற்கும் இதே எதிர்காலத்தையே தேடுகிறார்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை அன்று பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் சுமார் 5,50,000 பேர் பங்கேற்றனர்.
இதில் குறைந்தது 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லிமோஜஸ் நகர மண்டபம் எரிக்கப்பட்டது மட்டுமின்றி, மார்செய்ல் நகர மண்டபத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த தளவாடங்களைச் சேதப்படுத்தியதுடன், மரியான் சிலையையும் கீழே தள்ளினர். மேலும், லில்லி மற்றும் கிரெனோபிள் நகரங்களில் உள்ள நகராட்சி அலுவலகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த வன்முறைகளுக்கு 'தீவிர இடதுசாரி' குழுக்களே காரணம் என்று பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு குற்றம் சாட்டியுள்ளார்.



