ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களைப் பயன்படுத்தி அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக 'கான்பிளிக்ட் ஆர்மென்ட் ரிசர்ச்' அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஈரானின் 'கைபர் ஷேகன்' ரக ஏவுகணைகளின் வடிவமைப்பை ஒத்த இந்த ஆயுதங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றித் தாக்கும் திறன் கொண்டவை. சுமார் 1,200 மைல் தொலைவு வரை பாயும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலக்குகளைத் தாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளன.
ஏமன் அதிகாரிகள் கைப்பற்றிய இரண்டு சரக்குக் கப்பல்களில் இருந்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் ஏவுகணை மோட்டார்கள், ஏவுகணை உடற்பகுதிகள் மற்றும் நிலைப்படுத்தும் துடுப்புகளுக்கான பிரத்யேக உலோக உதிரிபாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சீனாவைச் சேர்ந்த உலோக உற்பத்தி நிறுவனத்துடன் தொடர்புடையவை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஹூதிகள் இத்தகைய திட எரிபொருள் ஏவுகணை உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வருவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஏமன் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதத் தடையை மதித்து நடப்பதாக சீனா கூறிவரும் நிலையில், ஹூதிகள் கைப்பற்றிய ஆயுதப் பொருட்களில் பெரும்பாலானவை சீன நிறுவனங்களிடமிருந்தே வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஹூதிகளின் இந்த வெளிநாட்டு கொள்முதல் வலையமைப்பு, அவர்களின் ஆயுதத் திட்டத்தின் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. முன்னதாக, ஹூதிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரிக்கா, அவர்களுடன் தொடர்புடைய விநியோகஸ்தர்கள் மீது தடைகளை விதித்துள்ளது.




