ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:35 மணியளவில் 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் விலியுச்சின்ஸ்க் நகருக்கு தென்மேற்கே 123 கி.மீ தொலைவில், 140 கி.மீ ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது கட்டடங்களுக்குப் பாதிப்போ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை என அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜப்பானின் வானிலை ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் குறித்து தவறுதலாக 9.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என ஆரம்பக்கட்ட எச்சரிக்கையை வெளியிட்டது. ஆனால், அந்த அமைப்பின் தரவுகளிலேயே நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அந்த எச்சரிக்கை உண்மையாக இருந்திருந்தால், அது வரலாற்றில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்திருக்கும். கம்சட்கா பகுதி, அதிக நில அதிர்வு செயல்பாடுகளைக் கொண்ட 'ரிங் ஆஃப் ஃபயர்' எனப்படும் புவித்தட்டு மண்டலத்தில் அமைந்துள்ளது.



