கனடாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாண மக்கள் கனடாவுடன் இணைந்திருக்கவே ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் டொனால்ட் டிரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த பிரதமர் மார்க் கார்னிக்கு இந்த முடிவு பெரும் வெற்றியாக அமைந்துள்ளது.
ஆல்பர்ட்டா தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டதில், 76 சதவீத மக்கள் கனடாவில் நீடிக்க ஆதரவு அளித்துள்ளனர். பிரிவினைக்கு ஆதரவாக சுமார் 24 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது ஒரு பிணைப்பு இல்லாத (non-binding) வாக்கெடுப்பு ஆகும்.
அதாவது, கனடாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான நேரடி வாக்கெடுப்பு அல்ல, மாறாக எதிர்காலத்தில் இது குறித்து வாக்கெடுப்பு நடத்தலாமா என்பது குறித்த கருத்துக்கணிப்பாகவே இது நடத்தப்பட்டது. இந்த முடிவை வரவேற்றுள்ள பிரதமர் மார்க் கார்னி, 'ஆல்பர்ட்டா மக்கள் தெளிவான முடிவை எடுத்துள்ளனர். அவர்கள் ஒற்றுமையையும், ஒன்றிணைந்து செயல்படுவதையும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஆல்பர்ட்டா மக்கள் கனடாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்' என்று குறிப்பிட்டார். மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் கூறுகையில், 'ஒற்றுமையான கனடாவில் வலுவான ஆல்பர்ட்டாவிற்காக மக்கள் வாக்களித்துள்ளனர்' என்று தெரிவித்தார். இருப்பினும், பிரிவினைவாதத் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆல்பர்ட்டா ப்ராஸ்பெரிட்டி புராஜெக்ட் அமைப்பின் ஜெஃப் ராத், இந்த முடிவுகள் பிரிவினைவாதக் கருத்துக்கள் இன்னும் மாகாணத்தில் நீடிக்கின்றன என்பதையே காட்டுகின்றன என்று கூறினார். ஆல்பர்ட்டாவின் எண்ணெய் வளம் மற்றும் ஒட்டாவாவின் மத்திய அரசு மாகாணத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகக் கூறி, பிரிவினைவாதிகள் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜேசன் கென்னி, கோவிட்-19 கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட அதிருப்தியே பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டியதாகக் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்றுவது குறித்துப் பேசியிருந்த சூழலில், இந்த வாக்கெடுப்பு முக்கியத்துவம் பெற்றது. கனடாவின் இறையாண்மையை மதிக்குமாறு அமெரிக்காவை பிரதமர் கார்னி வலியுறுத்தியிருந்தார்.
இதற்கிடையில், பிரிவினைவாதத் தலைவர்கள் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்ததாக வெளியான செய்திகளை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. வாக்கெடுப்பின் முடிவுகள் தெளிவானதாக இருந்தாலும், ஆல்பர்ட்டாவின் ஆளும் ஐக்கிய கன்சர்வேடிவ் கட்சியில் பிரிவினைவாதிகள் மற்றும் மிதவாதிகளுக்கு இடையிலான மோதல் தொடரும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


